எமது பங்கு

லூர்து கோட்டம் தோற்றமும் தேவையும்

இலங்கையில் இடம்பெற்ற இனவிடுதலைக்கான போரினால் ஏற்பட்ட தாக்கம் மிகக் கனதியானது. போரின் வடுக்களால் எமது போயிட்டி – சீந்திப்பந்தல் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இடப்பெயர்வுகளுக்கும் அவலங்களுக்கும் எமது மக்களின் வாழ்வியலை முற்றாக புரட்டிப்போட்டது. அவ்வேளையில் செய்வதறியாது திக்கற்று அலைந்த பலரில் சிலர் புலம்பெயர்ந்து தூர தேசங்களில் வாழ்த் தலைப்பட்டனர். அவ்வாறு புலம்பெயர்ந்த எம்மவர் உலகின் பல்வேறு நாடுகளில் தமக்கான வாழ்வியலை தேடிக்கொண்டனர். இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் தமக்கென்ற பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் தாம் பிறந்த வளர்ந்த ஊர்களின் வளர்ச்சிக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டும் என்ற தூர நோக்குச் சிந்தனை தோற்றம் பெற்றது.

2005ம் ஆண்டில் போயிட்டி வாழ் மக்களையும் சீந்திப்பந்தல் மக்களையும் லூர்து அன்னையின் ஆசியோடு ஒன்றிணைக்கும் எண்ணம் கருக்கட்டியது. “லூர்து கோட்டம்” எனப் பெயரிட்டு இரண்டு ஊர்மக்கள் குழுமத்தை இணைக்கும் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்கோடு www.poddy.com என்னும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் போர்ச் சூழலால் எமது மக்களின் இணையப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தது. இதனால் லூர்த்து கோட்டம் தொடர்பான கருத்துருவாக்கம் பலராலும் அறிப்படாத ஒன்றாக இருந்தது என்பதே உண்மை, அதேவேளை இணையத்தளத்தில் போயிட்டி – சீந்திப்பந்தல் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற துயரச் செய்திகள், லூர்த்து அன்னையின் கோவில் செயற்பாடுகள் போன்ற தகவலை தாங்கியே www.poddy.com இணையத்தளத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.

2005ம் ஆண்டில் இருந்து இயங்குநிலையில் இருந்த இவ் இணையத்தளத்தின் தோற்றம் தொடர்பான விடயம்
2016ம் ஆண்டில் லூர்து அன்னையின் திருத்தலத்தில் இடம்பெற்றதொரு கூட்டத்தில் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவ்வேளையில் போயிட்டி – சிந்திப்பந்தல் மக்களை “லூர்த்து கோட்டம்” என்ற பெயரில் ஒன்றிணைப்பது தொடர்பாக சிலாகிக்கப்பட்டது. அன்னையின் திருத்தலத்தின் பணிகளையும், இளையோரின் கல்விச் செயற்பாடுகளையும் மேம்படுத்தும் உயரிய சிந்தனையை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக இணையத்தளத்தினை பராமரிக்கும் பணி திருமிகு. விதுஷன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சில வருடங்கள் சீராக இயங்கிவந்த இணைத்தளம் துர்அதிஸ்டவசமாக இயங்குநிலையில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டது.

இந்த வருடம் பெப்பிரவரி மாதம் லூர்த்து அன்னையின் திருத்தலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் போயிட்டி – சிந்திப்பந்தல் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டை “லூர்து கோட்டம்” என்னும் இணையத்தளத்திற்கு முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதோடு, இணையத்தளத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து எமது அடுத்த கட்ட நகர்வை நோக்கி சிந்திக்க தலைப்படவேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அதற்கான முழுமையான ஆதரவுக் கரங்கள் ஒன்றுபடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் காணப்படுவதாக அறியக்கிடைக்கிறது.

லூர்த்து கோட்ட மக்களின் வாழ்வியலை முன்னெடுக்க வேண்டிய பாரிய பணி எம்முன் விரிந்து கிடக்கின்றது. போயிட்டி – சீந்திப்பந்தல் மக்களிடையே கடந்தகாலத்தில் இருந்த சில முறையற்ற, பொறுப்பற்ற கருத்து முரண்பாடுகளையும், கசப்பான அனுபவங்களையும் புறந்தள்ளி ஒன்றாகப் பணியாற்ற வேண்டியது காலமிடும் கட்டளையாகும்.

புலம்பெயர்ந்த எமது உறவுகள் தமது சொந்தங்களைப் புதுப்பிக்க மீண்டும் தாயகம் வந்து செல்லக் கூடிய சாதகமான காலச்சூழல் தற்போது இருப்பதால், காலத்தின் தேவைக்கேற்ப எமது பாதையை நாமே செப்பனிட்டு, மக்களின் தேவையறிந்து அவசியம் செய்யவேண்டிய குறுங்கால, நெடுங்காலப் பணிகளைத் திட்டமிட்ட வேண்டும். திட்டமிட்ட இப்பணிகளை சிரமேற்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திப் பிடிக்க, புலம்பெயர் “லூர்து கோட்டத்து மக்கள்” ஒன்றித்துக் கரம்பற்றி பயணிப்போம். இப்பணியை முடுக்கிவிட www.poddy.com இணையத்தளத்தை புதுமுகத்தோடு புதுப்பித்து தேவையான தகவல்களை பகர்வதோடு, மக்கள் தேவைக்கான கருத்துக்களத்தை உருவாக்குவது பொருத்தமானதாக அமையும். எனவே “லூர்த்து கோட்டம்” என்ற கோட்பாட்டிற்கு வலுச்சேர்ப்போம்.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாடிய பாரதியின் கருத்தாழம் மிகுந்த வரிகளுக்கேற்ப, எமது மக்கள் மீது நாம் கொண்டுள்ள பாசத்தைத் தணியாது பாதுகாத்து, எமது நேசத்து உறவுகளின் எதிர்காலம் சிறப்புற தோள் கொடுப்போம், துணை நிற்போம்.

நன்றி –

நட்போடு,

அமரபாலா
நோர்வே.